மணிலா: கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக போராளிகளின் வசம் இருந்த மராவி நகரை மீட்டுவிட்டோம் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே பிரகடனம் செய்துள்ளார். ஐஎஸ் ஆதரவு பெற்ற போராளி களிடமிருந்து மராவி விடுவிக்கப் பட்டதாக திரு டுட்டர்டே அறி வித்துள்ளார். பிலிப்பீன்சின் மராவி நகரில் ராணுவம் மேற்கொண்ட கடும் தாக்குதலில் இஸ்னிலான் ஹஃபிலான், ஒமர் மவுட் ஆகிய இரு போராளிகள் கொல்லப்பட்ட மறுநாள் மராவி நகருக்கு சென்றிருந்த திரு டுட்டர்டே அந்நகரில் உள்ள வீரர்களிடம் மராவி மீட்கப்பட்டது பற்றி அறிவித்தார். மராவி நகருக்குள் இன்னும் சுமார் 30 போராளிகளும் 20 பிணையாளிகளும் இருப்பதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இஸ்னிலான், ஒமர் மவுட் ஆகிய இரு போராளிகள் கொல்லப்பட்டதை அடுத்து மராவி நகரில் உள்ள ஐஎஸ் பிரிவின் தலைமை பொறுப்பை மலேசிய முன்னாள் விரிவுரையாளர் மஹ்முட் அகமது ஏற்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. போராளியாக மாறிய மலாயா பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரான மஹ்முட், ஐஎஸ் குழுவுடன் தொடர்புடைய அபு சாயஃப் குழு உறுப்பினர்கள் மதிக்கும் முக்கிய உறுப்பினராக விளங்குகிறார். இஸ்னிலானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருந்த மஹ்முட் தற்போது முதலிடத்திற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. மஹ்முட் 2014ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிலிப்பீன்சிற்கு தப்பிவந்த பிறகு அபு சாயஃப் குழுவில் சேர்ந்து அக்குழுவின் மதிப்பைப் பெற்றார். அபு சாயஃப் குழு, மவுட் குழு போன்ற இஸ்லாமிய குழுக்களை ஒன்றுசேர்த்தவர் மஹ்முட்.

