'நைஜரில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க ராணுவ வீரரை டிரம்ப் அவமதித்தார்'

'நைஜரில் வீழ்த்தப்பட்ட அமெரிக்க ராணுவ வீரரை டிரம்ப் அவமதித்தார்'

1 mins read

வா‌ஷிங்டன்: நைஜரில் ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் சார்ஜண்ட் லா டேவிட் ஜான்சனை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவமதித்ததாக மறைந்த வீரரின் தாயார் கொவான்டா ஜோன்ஸ் ஜான்சன் வா‌ஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். துக்கம் விசாரிப்பதற்குத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அதிபர் டிரம்ப், மறைந்த வீரரின் கர்ப்பிணி மனைவியிடம் பேசுகையில், அவரது கணவர் "இது போன்ற முடிவுக்குத் தயாராகத் தான் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.

மரியாதையின்றி டிரம்ப் பேசியதாகவும் மனதைப் புண்படும்படி அந்தக் கருத்து இருந்ததாகவும் அவரது தாயார் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த டிரம்ப், இது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினரின் சதி என்றும் அந்த தொலைபேசி கலந்துரையாடல் நல்ல முறையில் நடந்ததாகவும் கூறியுள்ளார். மீண்டும் குற்றம் சாட்டினால் அதற்கு எதிரான ஆதாரங்களும் தன் வசம் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். இம்மாதம் 4ஆம் தேதி கொல்லப்பட்ட நான்கு வீரர்களில் ஜான்சன் ஒருவர். வீழ்ந்த வீரர்களின் குடும்பங்களுடன் டிரம்ப் உடனே தொடர்புகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவி வருகிறது.