ஹராரெ: ஸிம்பாப்வேயின் அதிபர் ராபர்ட் முகாபேயை (படம்) சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை நல்லிணக்கத் தூதுவராக நியமித்துள்ளது. அவர் ஆளும் நாடே சுகாதாரப் பிரச்சினையில் மூழ்கியுள்ள நிலையில் முகாபேவுக்கு இந்தப் பதவியை அளித்ததற்காக ஐநா கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 93 வயதாகும் முகாபே, 1980லிருந்து ஸிம்பாப்வேயின் அதிபராக பதவி வகித்து வருகிறார். அவரது உடல் நிலை மோசமாகி வருவதால், வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸிம்பாப்வேயின் சுகாதாரத் துறை வலுவிழந்து இருப்பதற்கு முகாபேதான் காரணம் என்றும் தான் ஆளும் நாட்டில் மருத்துவத் துறையைக் கவலைக் கிடமான நிலைக்கு தள்ளிவிட்டு தனது சிகிச்சைக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதைச் சுட்டிக்காட்டி சாடியுள்ளார்,
ஸிம்பாப்வேயின் எதிர்கட்சிப் பேச்சாளர் ஒபர்ட் குடு. ஆப்பிரிக்கா கண்டம் முழுதும் இதய நோய், பக்கவாதம், ஆஸ்துமா போன்ற தொற்றா நோய்களைச் சமாளிக்கும் பொறுப்பை முகாபேயிடம் கொடுத்ததற்கு பரவலான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. வன்முறை கொண்ட அடக்குமுறை, தேர்தல் மோசடி, பொருளாதார வீழ்ச்சியை உண்டாக்கியது போன்ற செயல்களுக்குக் காரணமாக குற்றம் சாட்டப்படும் முகாபே இந்த பதவிக்கு உகந்தவர் அல்ல என்று கூறப்படுகிறது.

