பிரதமர்: தாய்லாந்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை நீக்கப்படவில்லை

பிரதமர்: தாய்லாந்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு தடை நீக்கப்படவில்லை

1 mins read

பேங்காக்: தாய்லாந்தில் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பிறகும் அரசியல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ சா தெரிவித்துள்ளார். தாய்லாந்து ராணுவம் 2014ஆம் ஆண்டு புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் அரசியல் கட்சி ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தடையை அகற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் நெருக்கிவரும் வேளையில் ஒரு சில காரணங்களுக்காக அத்தடையை இப்போது அகற்ற இயலாது என்று பிரதமர் கூறியுள்ளார்.

தாய்லாந்தில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று திரு பிரயுத் இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தார். இத்தேர்தல் தாய்லாந்தில் ஜனநாயகம் திரும்ப வழி வகுக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே தாய்லாந்திலிருந்து தப்பிச்சென்ற அந்நாட்டு முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ரவின் அனைத்து பாஸ்போர்ட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டான் பிரமுட்வினாய் தெரிவித்துள்ளார். திருவாட்டி யிங்லக் நான்கு பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் கூறினர்.