சவூதி இளவரசர்கள் மீது லஞ்ச, ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள்

சவூதி இளவரசர்கள் மீது லஞ்ச, ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள்

2 mins read

ரியாத்: சவூதி அரேபியாவில் அதிரடியாக கைது செய்யப் பட்ட 11 இளவரசர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது லஞ்ச, ஊழல் குற்றச் சாட்டு களும் பண மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சுமத்தப் பட்டுள்ளதாக சவூதி உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் அமைக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான புதிய குழு சனிக்கிழமை சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களையும் நான்கு அமைச்சர்களையும் 12க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்களையும் கைது செய்தது. கைது ஆணை மற்றும் பயணத் தடைகளை விதிக்க இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான இளவரசர் அல்வலித் பின் தலாலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள இவர் உலகில் உள்ள பணக்காரர் களில் ஒருவர் என ஃபோர்ப்ஸ் கூறுகிறது. இந்நிலையில் இவர் மீது பண மோசடி, லஞ்ச/ ஊழல் விவகாரம் மற்றும் அதிகாரி களை மிரட்டிப் பணம் பெற்றது ஆகிய குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ள தாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பதவியிலிருந்து நீக்கப்பட் தேசிய தற்காப்புப் படைத் தலைவர் இளவரசர் மிடெப் பின் அப்துல்லா மீது மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன. ரியாத் முன்னாள் ஆளுநரான இளவரசர் டர்கி பின் அப்துல்லா மீது லஞ்ச, ஊழல் விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் இப்ராகிம் அல் அசாஃப் மீது மோசடி மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.