மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளைத் தொடங்கும் ஆசியான் தலைவர்களின் உச்ச நிலைக் கூட்டத்தில், பயங்கரவாத மிரட்டல், பாதுகாப்பு, வர்த்தகம், தென்சீனக் கடல் பிரச்சினை, வடகொரிய விவகாரம் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளன. ஆசியானின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் அதன் கலந்துரையாடல் பங்காளி நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ளும் இக்கூட்டத்தை பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தொடங்கிவைத்து உரையாற்றுவார். ஐஎஸ் ஆதரவு போராளிகளின் ஆபத்துகள், அதிகரித்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்படப் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் தலைவர்கள் விவாதிக்கவிருப்பதாக ஆசியான் தூதர்கள் கூறியதாக சின் ஹுவா தகவல்கள் கூறின. பயங்கரவாதக் குழுக்கள் புதிய வடிவில் மீண்டும் உருவாவதைத் தடுக்கவும் இந்த வட்டாரத்தில் தீவிரவாத சித்தாந்தங்கள் பரவுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி தலைவர்கள் இக்கூட்டத்தில் வலியுறுத்த இருப்பதாகவும் கூறப் படுகிறது.
மணிலா கூட்டத்தில் வர்த்தகம், பயங்கரவாதம் முக்கிய பேச்சு
1 mins read

