முகாபேயின் 37 ஆண்டு ஆதிக்கம் முடிவுற்றது

முகாபேயின் 37 ஆண்டு ஆதிக்கம் முடிவுற்றது

1 mins read
2c5b7f67-adcb-49b6-95fe-287b445c39ca
-

ஹராரே: ஸிம்பாப்வேயின் அதிபரும் அந்நாட்டின் ஆளுங் கட்சித் தலைவருமான 93 வயது ராப்ர்ட் முகாபே நேற்று கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஸிம்பாப்வேயின் ஆளும் ஸானுபிஎஃப் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த எம்மர்சன் மனங்காக்வுவா பொறுப் பேற்று உள்ளார். ஸானுபிஎஃப் கட்சியினர் நேற்று சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மனங்காக்வுவா மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டதுடன் முகபே கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தனது மனைவியும் தன்னை விட 40ஆண்டுகள் சிறியவருமான கிரெஸ் முகாபே அடுத்த அதிபர் ஆவதற்கு வழிவகுப்பதற்காக, நாட்டின் துணை அதிபரான மனங்காக்வுவாவைக் கடந்த வாரம் பதவியிலிருந்து நீக்கினார் முகாபே. பதவிக்கான போராட்டத்தால், 37 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டுவந்த முகாபேவிற்கு எதிராக ராணுவம் நடவடிக்கையை மேற்கொண்டது. ஸிம்பாப்வே 1980=ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து முகாபே அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார். ராணுவம் கையில் எடுத்ததைக் கொண்டாடும் விதமாக, சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முகாபே பதவி விலக வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தினர். முகாபே பதவி விலகக் கோரி தலைநகர் ஹராரேயில் நேற்று முன்தினம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணி நடந்தது.

ஸிம்பாப்வேயின் ஆளுங்கட்சி நேற்று நடத்திய சிறப்பு மத்தியக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராபர்ட் முகாபே நீக்கப்பட்ட செய்தியைக் கேட்டு கூட்டத்திற்கு வந்திருந்தோர் மகிழ்ச்சியில் திளைத்தனர். படம்: ராய்ட்டர்ஸ்