ஹராரே: ஸிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே பதவி விலக கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் அவரது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றிய பலதரப்பட்ட யூகங்கள் வெளிவருகின்றன. முன்னதாக திரு முகாபே பதவி விலகுவது குறித்த கோரிக்கைகளுக்கு இணங்கியதாகவும் பதவி விலகல் கடிதம் தயாராக இருப்பதாகவும் அவருடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்த ராணுவ அதிகாரிகளில் ஒருவர் கூறினார். திரு முகாபேக்கும் அவரது மனைவிக் கும் தண்டனையிலிருந்து விலக்கு அளிப் பது உட்பட பல நிபந்தனைகளின் பேரில் அவர் பதவி விலக சம்மதித்திருப்பதாக ராணுவத் தகவல்கள் கூறுகின்றன. அவர் முறையாக பதவி விலகுவதற்கு முன்னதாக அவரது பதவி விலகல் கடிதம் நாடாளுமன்ற நாயகருக்கு அனுப்பி வைக்கப்பட வேண் டும் என்று ராணுவ வட்டாரம் தெரிவிக்கிறது.
அவர் முறையாக பதவி விலகிய பின்னர் அவரது 37 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வரும். முன்னதாக ஞாயிற்றுக் கிழமை முகாபே ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தான் பதவியில் நீடிக்கப் போவதாகக் கூறியிருந்தார். முகாபேயின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களை அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஆளும் கட்சி அவருக்கு நேற்று மதியம் வரை 24 மணி நேர காலக்கெடு விதித்தது. அவ்வாறு பதவி விலகவில்லை என்றால் அவருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் அவரது கட்சி அறிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பதவி விலக சம்மதித்திருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. ஸிம்பாப்வேயில் ராணுவம் கடந்த புதன்கிழமை அதிரடியாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முகாபே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் பதவி விலகக் கோரி ராணுவத்தினரும் வட்டார கிளை களின் தலைவர்களும் மக்களும் வலியு றுத்தி வந்தனர். ஆனால் பதவி விலக மறுத்து வந்த முகாபே இறுதியில் நேற்று பதவி விலக இணங்கியுள்ளார்.
ஸிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே அந்நாட்டு தற்காப்புப் படை மூத்த அதிகாரிகளை யும் போலிஸ் அதிகாரிகளையும் அதிபர் மாளிகையில் சந்தித்தார். படம்: ராய்ட்டர்ஸ்

