ஹராரே: அதிபர் பதவியிலிருந்து திரு முகாபே விலகியதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபராக எமர்சன் மனங்காக்வா பொறுப்பேற்றுக்கொண்டார். தலைநகர் ஹராரேயில் சுமார் 60,000 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதிய அதிபர் பதவி ஏற்றுக்கொள்வதை நேரில் காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர். திரு முகாபே, 37 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு ராணு வத்தினரின் நெருக்குதலின் பேரில் இரு நாட்களுக்கு முன்பு பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து, புதன்கிழமை நாடு திரும்பிய 'முதலை' என்று அழைக்கப்படும் எமர்சன் மனங்காக்வா நேற்று ஸிம்பாப்வே அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முகாபே கலந்து கொள்ளவில்லை. ஸிம்பாப்வேயில் தற்போது 90 விழுக்காட்டினர் வேலையில்லாமல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள வேளையில் நாட்டில் புதிய வேலை களை உருவாக்கப்போவதாக திரு மனங்காக்வா உறுதி அளித்தார். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளியலை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல விரும்பு வதாகவும் அவர் கூறினார்.

