கெய்ரோ: ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அங்கீகரித்ததை உலக நாடுகள் குறை கூறி வரும் வேளையில் தற்போது அரபு நாடுகளும் அதில் சேர்ந்துள்ளன. திரு டிரம்ப்பின் அந்த முடிவு மத்திய கிழக்கு நாடுகளில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்படுவதற்கான ஆபத்துகளில் சிக்கவைத்துள்ளது என அரபு நாடுகளின் அதிகாரிகள் கூறி யுள்ளனர். இந்த வட்டாரத்தின் மிக முக்கிய மான பிரச்சினைகளில் அமெரிக் காவின் நடுநிலைமை கொள்கை திரு டிரம்பின் இந்த முடிவால் முடிவுக்கு வந்துவிட்ட தாக பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. மத்திய கிழக்கில் சமாதானத்தை ஏற்படுத்தும் தூதராக அமெரிக் காவை நம்பியிருக்க முடியாது என அரபு நாடுகள் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூறி யுள்ளனர். மேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் மூன்றாம் நாளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் உட்பட 22 நாடுகள் திரு டிரம்ப்பின் அந்த முடிவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளன.
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க லெபனானிய பாதுகாப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். படம்: ஏஎஃப்பி

