வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்குத் தீவை சக்திவாய்ந்த புயல் உலுக்கியதில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக மின்சாரம் இன்றி ஆயிரக்கணக்கானோர் தவிக்க நேரிட்டது. வெள்ள அபாயம் உள்ள இடங்களில் இருந்து பலர் அவர்களது வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளனர்.
நேற்று முன்தினத்திலிருந்து நியூசிலாந்தைப் பதம் பார்த்து வரும் புயல், தலைநகர் வெலிங்டனை நோக்கிச் செல்வதாக அந்நாட்டின் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் கனமழை பெய்ததாக அந்நாட்டின் தேசிய நீர், சுற்றுப்புற ஆய்வுக் கழகம் கூறியது. மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்று ஏர் நியூசிலாந்து டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

