பாரிஸ்: பாரிஸ் நகரில் பிரபல ரிட்ஸ் ஹோட்டலில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் கொள்ளைக்காரர்கள் புகுந்து பல மில்லியன் யூரோ மதிப்புள்ள விலை உயர்ந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக பிரெஞ்சு போலிசார் தெரிவித்துள்ளனர். ஆயுதம் ஏந்திய கொள்ளைக்காரர்கள் ஐந்து பேர் அந்த நகைக்கடையின் கண்ணாடிக் கதவை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக போலிசார் கூறினர். கொள்ளைக்காரர்கள் மூவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற இருவரை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஏதேனும் சில நகைகளை போலிசார் மீட்டனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்நிலையில் போலிசாரின் துரித நடவடிக்கையால் கொள்ளைக்காரர்களில் மூவர் பிடிபட்டதாக போலிஸ் ஆணையாளர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

