பெய்ஜிங்: சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் மூட பெய்ஜிங் திட்டமிடுகிறது. குறைந்தபட்சம் 40 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் அத்தகைய சட்டவிரோத கட்டடங்களையும் 500 உற்பத்தி நிறுவனங்களையும் மூடுவதோடு அத்தகைய கட்டடங்கள் இனிமேலும் அதிகரிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய இருப்பதாக அந்த நகரின் தற்காலிக மேயர் சென் ஜினிங் அரசுக்கு சமர்ப்பித்த தமது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நகர மையத்திலிருந்து மக்களை வேறு இடங்களுக்கு குடி அமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். சென்ற ஆண்டும் இதேபோன்ற அறிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது பற்றி தகவல் ஏதுமில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டு நிகழ்ந்த மிக மோசமான தீச் சம்பவத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய கட்டடங்கள் அழிந்ததோடு பல வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களது வீடுகளிலிருந்தும் வர்த்தகங்களிலிருந்தும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய, கீழ்மட்டத்தில் இருப்பவர்களைக் குறிவைத்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாக மாணவர்கள், ஊடகவியலாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் நகரம் முழுவதும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டது. சட்டவிரோதமாகத் திறக்கப்படும் கடைகளும் மூடப்படும் என்று பெய்ஜிங் நகர மேயரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு மாற்று தங்கும் வசதி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

