ஷங்காய்: சீனாவின் ஷங்காய் நகரில் வாகன ஓட்டுநர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்ததைத் தொடர்ந்து அந்த வாகனம் சாலையோரமாக நடந்து சென்றவர்கள் மீது மோதியதில் 18 பேர் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். இது ஒரு விபத்து என்று ஆரம்பக்கட்ட புலன்விசாரணை உணர்த்துவதாக போலிஸ் அறிக்கை கூறுகிறது. காயம் அடைந்தவர்களில் அந்த வாகன ஓட்டுநரும் ஒருவர். ஷங்காய் நகரில் உள்ள மக்கள் சதுக்கத்திற்கு அருகே அந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததும் அந்த வாகனம் நடைபாதை மேடையில் மோதி பின்னர் பாதசாரிகள் மீது மோதியதாக போலிஸ் வட் டாரங்கள் கூறின. சென் என்ற புனைபெயரில் அழைக்கப்படும் 40 வயதான ஓட்டுநர் சிகரெட் புகைத்தபடியே வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் அவர் ஆபத்தான பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்றதாகவும் போலிசார் கூறினர். அந்த வாகனம் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்றதாக நாளேடு ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது.
அந்த வாகனம், பாதசாரிகள் மீது மோதுவதற்கு முன்னதாக அது தீப்பற்றி எரிந்ததை நேரில் பார்த்ததாக பாதுகாப்பு காவலாளி ஒருவர் கூறினார். அந்த வாகனத்தின் கண்ணாடி கதவுகளை உடைத்து அதில் இருந்த ஓட்டுநர் உட்பட 6 பேரை அந்த வழியாகச் சென்றவர்கள் காப்பாற்றினர்.

