சோல்: பல ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரிய உயர் அதிகாரி ஒருவர் இந்த வாரம் தென் கொரியாவுக்குச் செல்லவுள்ளார். தென்கொரியாவில் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க வடகொரிய உயர் அதிகாரி கிம் யோங் நாம் 22 பேர் கொண்ட குழுவுடன் அங்கு செல்ல இருப் பதாக தகவல்கள் கூறுகின்றன. போட்டிகளின் தொடக்க விழாவின் போது இரு நாட்டு வீரர்களும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்லவுள்ளனர். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா கலந்து கொள்வது,
இரு கொரியாக்களின் உறவு மேம்பட்டிருப்பதற்கான அறிகுறி என்று கருதப்பட்ட போதி லும் இதனால் வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்களில் மாற்றம் எதுவும் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வடகொரிய அதிகாரி கிம் மூன்று நாள் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை தென்கொரியா செல்கிறார். 90 வயதாகும் கிம் யோங், தமது வாழ்நாளில் வடகொரியத் தலைவர்கள் மூவரின் ஆட்சி காலத்தை பார்த்து வந்துள்ளார். வடகொரியாவின் விழாக் குழுத் தலைவராக பல உறுப்பினர்களுடன் திரு கிம் தென்கொரியா செல்கிறார். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் கலந்து கொண்டால் அவருடன் சேர்ந்து திரு கிம் யோங் நாமும் அதில் கலந்து கொள்ள வேண்டியிருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

