ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவில் உள்ள அகுங் எரிமலையின் சீற்றம் தணிந்ததைத் தொடர்ந்து முன்பு வெளியேறிய மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரவுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த எரிமலையின் சீற்றம் பல மாதங்களாக அதிகரித்திருந்தது. அந்த எரிமலை கக்கிய புகையும் அந்த எரிமலையிலிருந்து வெளியான தீக்குழம்பும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அந்த எரிமலையின் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அப்போது சுமார் 100,000 பேர் வெளியேற்றப்பட்டனர். பாலி அனைத்துலக விமான நிலையமும் சில நாட்கள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த எரிமலையின் சீற்றம் சற்று தணிந்ததைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வரலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எரிமலையின் சீற்றத்திற்கு அஞ்சி வீடுகளைவிட்டு வெளியேறியவர்களில் தற்போது 20,000 பேர் 180 இடங்களில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அகுங் எரிமலை 1963ஆம் ஆண்டு வெடித்து குமுறியபோது 1,600 பேர் உயிரிழந்தனர்.

