தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை வடகொரியாவுக்கு அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் அழைத்துள்ளார். வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கில் இருநாடு களுக்கிடையிலான உச்சநிலை மாநாட்டை நடத்தும் தமது விருப்பத்தை அவர் தெரிவித் துள்ளார். இதுகுறித்து கிம் ஜோங் உன் கைப்பட எழுதிய கடிதத்தை அவரது தங்கையான கிம் யோ ஜோங் தென்கொரிய அதிபரிடம் நேற்று நேரில் சென்று கொடுத்தார். இந்தச் சந்திப்பின்போது தென்கொரிய அதிபரும் திருவாட்டி கிம்மும் பாரம்பரிய கொரிய உணவு அருந்தி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்குப் பேசினர்.
திருவாட்டி கிம், தென் கொரியாவின் பியோங்சாங்கில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் வடகொரிய அணிக்குத் தலை மைதாங்கும் பேராளர் குழு வைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் அவர் வடகொரியத் தலைவரின் சிறப்புத் தூதர் என்கிற முறையில் தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தென்கொரிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. தென்கொரிய அதிபரைக் கூடிய விரைவில் சந்திக்க கிம் ஜோங் உன் விரும்புவதாக அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தென் கொரிய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வடகொரியத் தலைவர் கைப்பட எழுதிய கடிதத்தை தென்கொரிய அதிபரிடம் (வலது) கொடுக்கும் கிம் யோ ஜோங். படம்: ஏஎஃப்பி

