டெல் அவிவ்: சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது கடும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எந்த ஒரு தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அறிவித்துள்ளார். சிரியா-இஸ்ரேல் எல்லையைக் கடந்து சென்ற ஈரானிய ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் இடைமறித்து அழித்ததுடன் சிரியாவில் உள்ள ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீச்சு தாக்கு தலில் ஈடுபட்டன. "எங்கள் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு முயற்சிக்கு எதிராகவும் இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்வது இஸ்ரேலியக் கொள்கை," என்று திரு நெட்டன்யாகு கூறினார்.
ஈரானின் ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி இஸ்ரேலியப் பகுதிக்குள் நுழைந்து விட்டதாக வும் இதற்கு ஈரானும் சிரியாவுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் நெட்டன்யாகு சொன்னார். ஈரானின் அத்துமீறிய செயலை இஸ்ரேல் எதிர்ப்பதாகக் கூறிய நெட்டன்யாகு, இஸ்ரேலிய ராணு வத் தலைவர்களுடன் நடந்த சந்திப்பின்போது இஸ்ரேல் அமைதியை விரும்புவதாகக் குறிப்பிட்டார். இதற்கிடையே அமெரிக்க தற்காப்பு அமைச்சு, இஸ்ரேல் அதனை தற்காத்துக் கொள்வதற்கான அதன் உரிமையை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது.

