ஜெருசலம்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுவது தொடர்பில் அவர் மீது அவசியம் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று இஸ்ரேலியப் போலிசார் தெரிவித்துள்ளனர். திரு நெட்டன்யாகு மீது லஞ்சம், நம்பிக்கை மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தங்களிடம் போதுமான ஆதாரங் கள் இருப்பதாக போலிசார் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இஸ்ரேலிய தொலைக்காட்சியில் பேசிய திரு நெட்டன்யாகு, தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் பிரதமராக தான் தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாமல் போகும் என்றும் உண்மை ஒரு நாள் வெளிவரும் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் திரு நெட்டன்யாகு கூறினார். நாட்டை தொடர்ந்து வழி நடத்தப்போவதாகவும் அவர் கூறினார். தேர்தல் சமயத்தில் மக்களின் நம்பிக்கையை திரும்பப் பெறுவேன் என்றும் அவர் சொன் னார். 68 வயதாகும் நெட்டன்யாகு 12 ஆண்டுகளாக இஸ்ரேலியப் பிரதமராக நீடிக்கிறார்.

