குவாந்தான்: ஸ்காட்லாந்தில் பணிபுரிவதாக கூறிய ஃபேஸ்புக் நண்பரிடம் மலேசிய பெண் 15 ஆயிரம் ரிங்கிட் தொகையை ஏமாந்துள்ளார். ஏமாற்றிய நபர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவராக இருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர். 54 வயது பெண் ஒருவர், ஃபேஸ்புக் மூலம் ஒருவரிடம் நட்பாகி உள்ளார். அந்த நபர் அப்பெண்ணிற்கு ஆப்பிள் மடிக் கணினி இரண்டு, ஐபோன் 7 திறன்பேசி, வைர நகை, கைப்பை, வாசனை திரவியங்கள் ஆகியவற்றை கடந்த 14ஆம் தேதி பரிசாக அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளான்.
அடுத்த நாள் கோலாலம்பூர் விமான நிலைய சுங்க அதிகாரி போல் பேசிய லியா என்ற ஒருவர், மலேசிய பெண்ணை தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது அவருக்கு அனுப்பப்பட்டுள்ள பொருட்களுக்கு உரிய போக்குவரத்து செலவான 15,200 ரிங்கிட் தொகையை குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். அதைப் போலவே மலேசிய பெண்ணும் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் அதன் பிறகு பரிசுப் பொருட்களும் வரவில்லை மேலும் குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொள்ளவும் முடியாத நிலையில், பாதிக்கப்பட்ட பெண் போலிசில் புகார் அளித்து உள்ளார்.

