பியோங்சாங்: வடகொரியா அதன் அணுவாயுத சோதனைகளை நிறுத்தும் வரை தொடர்ந்து அமெரிக்கா நெருக்கடி கொடுக்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. தென்கொரியாவில் நடந்துவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் சென்றுள்ள வேளையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான தடைகளை டிரம்ப் வடகொரியாவுக்கு எதிராக அறிவித்த சில நாட்களில் இவான்கா இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். இதன் தொடர்பில் பேசிய வெள்ளை மாளிகைப் பேச்சாளர் வடகொரிய அதிகாரிகளை இவான்கா சந்திக்க மாட்டார் என்றும் ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் அந்நாட்டுப் பிரதிநிதிகளுக்கு அருகில் அமர மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். முந்தைய அதிபர்கள் போல இல்லாமல் கடுமையான முறையில் வடகொரிய விவகாரம் கையாளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

