நியூயார்க்: சிரியாவில் கிளர்ச்சியாளர் களைக் குறிவைத்து அரசாங்க ஆதரவுப் படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்கா ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் 30 நாள் சண்டை நிறுத்தத்திற்கு ஐநா பாதுகாப்பு மன்றத்தில் சனிக்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து சண்டை நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அரசாங்கப் படையினரின் தாக்குதல்களில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது, தற்காலிக முகாம்கள் அமைப்பது போன்ற பணிகள் இந்த 30 நாட்களில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சண்டை நிறுத்தத்தை ஐஎஸ் போராளிகள் மதித்து நடக்க மாட்டார்கள் எனத் தெரிகிறது. ஐநா பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் சிரியாவில் சண்டை நிறுத்தம் குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அதை ரஷ்யா ஆதரிக்க வேண்டும் என்று மற்ற உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் சிரியா அதிபர் ஆசாத்தின் படைகள் கடுமையாகத் தாக்கி வருகின்றன. இத்தாக்குதல்களில் கடந்த சில நாட்களில் மட்டும் 500 பேர் உயிரிழந்ததாக மனித உரிமை கண் காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
சிரியாவில் சண்டை நிறுத்தம் குறித்து ஐநா பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, ஐநாவுக்கான சீனத் தூதர் ஸஹோஜியுடன் ஆலோசிக்கிறார். படம்: ஏஎஃப்பி

