பாப்புவா நியூகினி புறநகர் பகுதியில் நிலநடுக்கம்

1 mins read

சிட்னி: பாப்புவா நியூகினி புறநகர் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பீட்டர் ஓ நெயில் கூறியுள்ளார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நிலநடுக்கத்தில் சாலைகள் பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகம் தடைப்பட்டதால் பல வீடுகள் இருளில் மூழ்கிய தாகவும் தகவல்கள் கூறின. சாலைகள் மற்றும் பாலங்கள் பழுதடைந்திருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தில் பல வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதம் அடைந்ததாகவும் அப்பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். நேற்று உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிர் சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக சில தகவல்கள் கூறுகின்றன. புறநகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிர்பாராத பெரும் பேரிடர் என்றும் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக 140 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கியிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.