கோலாலம்பூர்: மலேசியத் தேர்தல் மே மாதக் கடைசியில் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்காலக் கட்டத்தில் தேர்தல் நடத்துவதற்கு வழிவிடும் வகையில் இம்மாதம் கடைசியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மலேசியத் தேர்தல் விரைவில் நடத்தப்படலாம் என்ற யூகம் நிலவும் வேளையில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், வரும் வாரத்தில் தேர்தல் தொகுதி எல்லை வரைபடத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொகுதி எல்லை வரைபடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த ஒரு சில நாட்களுக்குள் மலேசிய மாமன்னரின் சம்மதத்தை பிரதமர் பெறுவார் என்று தெரிகிறது. நாடாளுமன்றம் மார்ச் 29 அல்லது மார்ச் 30 ஆம் தேதிக்குள் கலைக்கப்பட்டு ஏப்ரல் கடைசி அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று ஒரு தகவல் கூறுகிறது. நோன்பு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக தேர்தலை நடத்தும் திட்டம் குறித்து பிரதமர் நஜிப் தேசிய முன்னணித் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்ததாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

