அவசரமாகத் தரை இறங்கிய விமானத்திலிருந்து குதித்த பயணிகள்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஃபீனிக்ஸ் நகருக்குப் புறப்பட்ட சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் அனைத்துலக விமான நிலையம் ஒன்றில் அவசரமாகத் தரை இறங்கியது. அந்த விமானத்தில் விமானியின் அறை முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் விமான சிப்பந்திகளும் பயணிகளும் பதற்றம் அடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். இதனால் அந்த விமானம் அல்புகுயர்கியூ அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரை இறக்கப்பட்டது. பயணிகள் அந்த விமானத்திலிருந்து வெளியேறுவதற்கு வசதியாக விமானத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டு தயாராக இருந்தன. இருப்பினும் பயணிகளில் சிலர் பதற்றம் காரணமாக விமானத்தின் இறக்கை பகுதியிலிருந்து கீழே குதித்ததாகவும் அவ்வாறு குதித்ததில் இருவர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.