காருக்குள் தனித்து விடப்பட்ட சிறுமி மரணம்

காருக்குள் தனித்து விடப்பட்ட சிறுமி மரணம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு மாது தன் இரண்டு வயதுப் பெண் குழந்தையை காருக்குள் விட்டுச் சென்றிருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் காருக்குள்ளேயே இருந்த சிறுமி மரணம் அடைந்ததாக போலிசார் கூறினர். அனல் காற்று தாக்கியதால் அந்தச் சிறுமி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. போர்ட் டிக்சன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றும் 32 வயது ஹஸ்மா மாஸ்ரோ என்ற மாது கல்லூரியின் கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு குழந்தையை காருக்குள்ளேயே விட்டுச் சென்றிருக்கிறார்.

நான்கு மணி நேரத்திற்குப் பின்னரே காருக்குள் குழந்தையை விட்டு வந்ததை அந்த மாது உணர்ந்ததாகவும் அவர் விரைந்து சென்று பார்த்தபோது காருக்குள் அவரது குழந்தை மயக்கமுற்ற நிலையில் காணப் பட்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிசார் கூறினர். அந்த மாது தன் குழந்தையைக் தூக்கிக்கொண்டு அவசரமாக மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்தில் அக்குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அக்குழந்தை மரணம் தொடர்பில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. இருப்பினும் குழந்தை சித்திரவதை குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.