மலேசியத் தேர்தல் மே மாதம் 3 ஆம் தேதி நடத்தப்படலாம்

மலேசியத் தேர்தல் மே மாதம் 3 ஆம் தேதி நடத்தப்படலாம்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் பொதுத் தேர்தல் மே மாதம் 3ஆம் தேதி நடத்தப்படலாம் என்பதை அம்னோ மகளிர் அணியின் அலுவலகத்தில் உள்ள மின்னிலக்க கடிகாரம் காட்டுகிறது. அந்த அலுவலகத்தின் சுவரில் இருந்த தொலைக்காட்சி திரையில் தெரியும் அந்த கடிகாரம் தேர்தல் இன்னும் 49 நாட்கள் இருப்பதைக் காட்டுகிறது. அதன்படி கணக்கிட்டால் தேர்தல் வரும் மே மாதம் 3ஆம் தேதி நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மலேசியாவில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.

மார்ச் மாதக் கடைசியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற யூகமும் நிலவுகிறது. இந்நிலையில் தேர்தல் ஏப்ரல் மாதக் கடைசியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் நடத்தப்படலாம் என்று சில தகவல்கள் கூறுகின்றன. தேர்தல் தொகுதி எல்லை அறிக்கையை மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோன்பு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படும் என்பதை திரு நஜிப் ஏற்கெனவே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.