வாஷிங்டன்: அமெரிக்காவில் பல ஆண்டுகளாக துப்பாக்கி வன் முறைச் சம்பவங்கள் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் மாணவர்கள் நேற்று முன்தினம் மாபெரும் ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டனர். வாஷிங்டனி லிருந்து லாஸ் ஏஞ்சலிஸ் வரை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அமெரிக்காவின் 50 மாநிலங் களில் உள்ள பல நகரங்களில் மாணவர்கள் வகுப்பறைகளைவிட்டு 17 நிமிடங்களுக்கு வெளிநடப்பு செய்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஃபுளோரிடா வில் உள்ள டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சட்டம் அமெரிக்காவில் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வரு கின்றனர். ஃபுளோரிடாவில் நடந்தது போன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இனி எங்கும் நடக்கக்கூடாது என்பதே தங்கள் விருப்பம் என்று ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட மாணவர்கள் கூறினர்.
இதற்கிடையே அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 வயது நிக்கோலஸ் குரூஸ், அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த அதே நாளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் அவன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுப்பதாகவும் தகவல்கள் கூறின.
ஃபுளோரிடாவில் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறையைவிட்டு வெளிநடப்பு செய்தனர். அருகில் உள்ள ஒரு பூங்கா வரை அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

