வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மயாமி நகரில் ஒரு பல்கலைக் கழகத்திற்கு அருகே ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் நால்வர் உயிரிழந்ததாகவும் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். இடிந்து விழுந்த பாலத்திற்கு அடியில் யாரேனும் சிக்கியுள்ள னரா என்பதை அறிய மீட்புக் குழுவினர் வியாழக்கிழமை இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடு பட்டிருந்தனர். மயாமி நகரில் உள்ள ஃபுளோரிடா அனைத்துலக பல்கலைக்கழகத் திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
எட்டு தடங்களைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையில் வாகனங் கள் வேகமாகச் செல்வதால் இந்தச் சாலையைக் கடப்பது கடினமாகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. இதனால் அந்தச் சாலையின் குறுக்கே பொதுமக்கள் நடந்து செல்வதற்காக ஒரு சிறிய பாலம் அமைக்கும் பணி கடந்த வாரம் தொடங்கியது. 862 டன் எடை மற்றும் 53 மீட்டர் நீளமான அந்தப் பாலம் சனிக்கிழமையன்று ஆறு மணி நேரத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மேம்பாலம் வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்ததால் சாலையில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியதாகவும் இதனால் அந்த வாகனங்களில் இருந்தவர்கள் காயம் அடைந்த தாகவும் போலிசார் கூறினர்.
மயாமி நகரில் நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்புக் குழுவினரும் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படம்: ஏஎஃப்பி

