சிரியா விமானத்தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

சிரியா விமானத்தளம் மீது ஏவுகணைத் தாக்குதல்

1 mins read
a50a8925-14ff-4af1-9bc6-a050d7fb3438
-

மாஸ்கோ: சிரியாவில் உள்ள ராணுவ விமானத்தளம் ஏவுகணை களால் தாக்கப்பட்டதில் பலர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஹோம்ஸ் நகருக்கு அருகில் உள்ள டியாஸ் விமானத்தளம் மீது நேற்று காலை நடத்தப்பட்ட ஏவுணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று சிரியாவும் ரஷ்யாவும் கூறியுள்ளன. இரு இஸ்ரேலிய போர் விமானங்கள் அந்த விமானத் தளம் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியதாகவும் லெபனானிய விமானத்தளத்திலிருந்து அந்த ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும் இன்டர்ஃபெக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தாக்கு தலில் 14 பேர் உயிரிழந்ததாக கண்காணிப்புக் குழு ஒன்று தெரிவித்தது. முன்னதாக அந்த விமானத்தளம் தாக்கப்பட்டதற்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று சிரியா கூறியிருந்தது.

அத்தாக்குதல் நடத்தியது அமெரிக்காவாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சிரியாவின் அரசு ஊடகம் தெரிவித்தது. ஆனால் அக்குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்தது. "தற்போது அமெரிக்க தற்காப்பு அமைச்சு சிரியாவில் விமானத் தாக்குதல்களை நடத்த வில்லை," என தற்காப்பு அமைச்சின் அறிக்கை தெரிவித் தது. இருப்பினும் சிரியா நிலவரத்தை அணுக்கமாக அமெரிக்கா கவனித்து வருவதாக அமைச்சு கூறியது.

சிரியாவில் அரசாங்கப் படை நடத்திய தாக்குதல் ரசாயனத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் வேளையில் அத்தாக்குதலில் காயமுற்ற பல குழந்தைகள் மூச்சுத் திணறல் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு தொண்டூழியர்கள் உதவுகின்றனர். காணொளி படம்: ஏஎஃப்பி