யங்கூன்: மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு ரோஹிங்யா முஸ்லிம்கள் 10 பேர் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பில் மியன்மார் வீரர்கள் 7 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த படுகொலையில் சம்பந்தப் பட்டிருந்ததற்காக அந்த ஏழு ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மியன்மார் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ராக்கைன் மாநிலத்தில் சென்ற ஆண்டு நடந்த அந்த படுகொலை பற்றி புலன்விசாரணை செய்துவந்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரு செய்தியாளர்கள் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மியன்மாரின் ரகசிய சட்ட விதிமுறைகளை மீறியதாக வா லோன் (31), காவ் சோ வூ (28) ஆகிய இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அந்த படுகொலைச் சம்பவம் பற்றிய செய்தியை ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்டதைத் தொடர்ந்து மியன்மார் ராணுவம் சொந்தமாக விசாரணை மேற்கொண்டது. ஆனால் ராய்ட்டர்ஸ் செய்தி அடிப் படையில் விசாரணையை மேற் கொள்ளவில்லை என்று ராணுவம் கூறியது.
ராக்கைன் மாநிலத்தில் உள்ள இன் டின் கிராமத்தைச் சேர்ந்த ரோஹிங்யா ஆடவர்கள் 10 பேர் ராணுவ வீரர்கள் மற்றும் பெளத்த சமயத்தைச் சேர்ந்த அக்கம்பக்கத்தார் சிலர் சேர்ந்து கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெரிய புதைகுழிக்குள் புதைக்கப் பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது. ரோஹிங்யா மக்கள் மீது மியன்மார் ராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறையின் ஒரு பகுதியே அக்கொலை என்று கூறப்பட்டது. அக்கொலையில் சம்பந்தப் பட்ட போலிசார் மற்றும் தனிநபர் கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ராணுவம் கூறியது. சென்ற ஆண்டு மியன்மாரிலிருந்து ரோஹிங்யா மக்கள் 700,000 பேர் தப்பிச் சென்று பங்ளாதேஷில் தஞ்சம் அடைந்தனர்.

