மலேசியா: மே 9ஆம் தேதி வாக்களிப்பு நாளன்று பொது விடுமுறை

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நாளான மே 9 ஆம் தேதி பொது விடுமுறை நாளாக மலேசிய அரசாங்கம் அறிவித்தது. மே 9ஆம் தேதி வார நாளாக இருப்பதாலும் வேலை நாளாக இருப்பதாலும் அதற்கு பலர் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து வாக்களிப்பபு நாள் பொது விடுமுறை நாளாக அறி விக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பல இடங்களில் வேலை பார்க்கும் மலேசியர்கள் வாக்களிப்பதற்கு தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிவர இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாக்காளர்கள் என்ற முறை யில் மலேசியர்கள் தங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு வழிவிடும் வகையில் மே 9ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இம்மாதம் 28ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 11 நாட்களுக்கு அரசியல் கட்சிகள் பிரசாரத்தை மேற்கொள்ளும். இந்நிலையில் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு வசதியாக மலேசிய மக்கள் தங்கள் நேரத்தைத் திட்டமிடுமாறு அனைத்து வாக்காளர்களுக்கும் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத் தேர்தலில் வாக்களிப்பது, ஒவ்வொரு மலேசியரின் உரிமை மற்றும் பொறுப்பாகும் என்று தேசிய முன்னணியின் தலைவரு மான திரு நஜிப் தெரிவித்தார்.

"நீங்கள் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகள் நாட்டின் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகும்," என்று அவர் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார். 'நாட்டிற்கான கடமை' என்ற தலைப்பில் அவர் அவ்வாறு கூறியுள்ளார். நேரம் கிடைத்தால், வாக்களிப்பு நடைமுறை, வாக்களிக்க வரும்போது எந்த ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும், வாக்களித்த பின்னர் உள்ள நடைமுறைகள் ஆகியவற்றை வாக்காளர்கள் வாசித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றும் திரு நஜிப் மலேசிய மக்களை ஊக்குவித் தார். "இவற்றைப் பற்றி மேலும் படிக்க, UndiNegaraku எனும் எங்கள் வாக்களிப்புப் பக்கத்தைப் பார்வையிடவும், தேர்தலில் எழக்கூடிய பல பொதுவான கேள்விகளுக்கும் அங்கு பதிலளிக்கப்படும்," என்றும் அவர் சொன்னார்.

அதே நேரத்தில், தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை பற்றி அறிந்து கொள்வதற்கும் நாட்டின் எதிர்காலத்தை உறுதிச் செய்வதற்கும், மக்கள் தொடர்ந்து தனது வலைப்பதிவு தகவல்களை அறிந்து கொள்ளுமாறு திரு நஜிப் கேட்டுக் கொண்டார்.