கோமா நிலையிலும் சுகப்பிரசவம்; பெண் குழந்தையைப் பெற்ற தாய்

1 mins read

பெய்ஜிங்: மூன்று மாதக் கருவை சுமந்தபடி கோமா நிலைக்குச்சென்ற மாது ஒருவர் ஆரோக்கியமான பெண் குழந்தையை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார். கருவுற்றிருந்தபோது உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதை அடுத்து ஷாவோ சையான் எனும் அந்தப் பெண் கோமா நிலைக்குச் சென்றார். சிசு நலமாக இருந்தது கண்டறியப்பட்டதால் கருவானது கலைக்கப் படவில்லை. தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், பின்னர் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். திருவாட்டி ஷாவோவுக்கு குழந்தை பிறந்து நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் அவர் இன்னும் கோமா நிலையிலேயே இருக்கிறார். மிகவும் இக்கட்டான நிலையிலும் குழந்தை நலமாகப் பிறந்ததுபோல ஷாவோவும் குணமடையும் அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையில் அவரது குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.