அவதூறு வழக்கில் ஒரு மில்லியன் ரிங்கிட் வென்ற அன்வாரின் மகள்

1 mins read

கோலாலம்பூர்: முன்னாள் காவல்துறை தலைவர் காலிட் அபு பக்கர், ஊரக, வட்டார மேம்பாட்டு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாகோப் ஆகியோருக்கு எதிராக அன்வாரின் மகளும் கெஅடிலான் ரக்யாட் கட்சியின் உதவி தலைவருமான நூருல் இஸ்ஸா அன்வார் அவதூறு வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க மலேசிய உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. திரு காலிட் 400,000 ரிங்கிட் வழங்கவும் இஸ்மாயில் சாப்ரி 600,000 ரிங்கிட் வழங்கவும் நீதித்துறை ஆணையர் ஃபைஸா ஜமாலுதீன் உத்தரவிட்டார்.

சூலு சுல்தான் என்று தன்னை அழைத்துக்கொண்ட 3ஆம் ஜமாலுல் கிராமின் மகளான ஜேசல் கிராமைச் சந்தித்ததால் தேசத் துரோகம் புரிந்ததுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக இருவர் மீதும் நூருல் இஸ்ஸா வழக்குத் தொடுத்திருந்தார். இது, 2013ல் சாபாவில் கிளர்ச்சிக்கு வழி வகுத்ததாகவும் கூறப்பட்டது.