வாஷிங்டன்: அமெரிக்காவின் டாலஸ் நகரிலிருந்து நியூயார்க் புறப்பட்ட செளத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்ட சுமார் 20 நிமிடத்தில் அந்த விமானத்தின் இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இயந்திர வெடிப்பால் உடைந்த பாகங்கள் விமானத்தினுள் சிதறி விழுந்தன. சன்னல் கதவு உடைந்து சிதறியது. அந்த சன்னல் அருகே அமர்ந்திருந்த ஒரு பெண், காற்று அழுத்தம் குறைந்ததன் காரணமாக சன்னலுக்கு வெளியே இழுக்கப் பட்டார். அந்த பெண்ணைக் காப்பாற்ற சக பயணிகள் முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் அடுத்து என்ன நேரப்போகிறது என்பது தெரியாமல் பயணிகள் தவித்தனர்.
விமான சிப்பந்திகள் பதற்றம் அடைந்தனர். ஆனால் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற டேமி ஜோ ஷுல்ட்ஸ் என்ற பெண்மணி எவ்வித பதற்றமும் அடையாமல் நிதானமாக செயல்பட்டார். செளத்வெஸ்ட் 1380 விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தீப்பற்றியுள்ளது என்ற செய்தியை மட்டும் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அனுப்பினார். பிலடெல்பியா விமான நிலையத்தில் மருத்துவக் குழுவினரை தயார் நிலையில் இருக்குமாறு டேமி ஷுல்ட்ஸ் கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் அடுத்த 40 நிமிடங்கள் வரை அவர் மிகத் திறமையாக விமானத்தை ஓட்டிச் சென்று பிலடெல்பியா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரை இறக்கினார். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் அந்த விமானியின் செயலைப் பாராட்டினர். அவர்தான் உண்மையான ஹீரோ என்று சிலர் ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டியுள்ளனர்.
விமானிகளுக்கான பயிற்சியின் போது நடந்த இதுபோன்ற சம்பவம் இப்போது எனக்கு உதவியாக இருந்தது என்று டேமி கூறினார். அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல் பெண் விமானிகளில் ஒருவரான டேமி ஒரு முறை அமெரிக்க விமானப் படையால் நிராகரிக்கப்பட்டவர்.
இரும்புப் பெண்மணி என்று பலராலும் புகழப்படும் டேமி ஜோ ஷுல்ட்ஸ். 1990களின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட படம்: படம்: வாஷிங்டன் போஸ்ட்

