கோலாலம்பூர்: எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்துள்ள உத் தேசத் திட்டங்களால் மலேசியாவுக்கு சுமார் 1 டிரில்லியன் ரிங்கிட் வரை கடன் சுமை ஏற்படும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மலேசியாவின் பொருளியல் சரிவைக்காணும் என்றும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியான பக்கத்தான் ஹரப்பான் வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சுங்கவரி, பொருள் சேவை வரி அகற்றப்படும் என்றும் மாணவர்கள் படிப்பதற்கு வழங்கப்படும் கடன் தொகையும் அகற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றை எல்லாம் ரத்து செய்தால் நாட்டின் கடன் 430 பில்லியன் ரிங்கிட் உயரும். இதனால் மலேசியாவின் மொத்த கடன் தொகை 1 டிரில்லியன் ரிங்கிட்டைவிட அதிகரிக்கும் என்று நிதி அமைச்சு மேற்கொண்ட ஆய்வு காட்டுவதாக திரு நஜிப் கூறினார். பக்கத்தான் ஹரப் பானின் உத்தேசத் திட்டங்களால் மலேசிய அரசாங்கத்திற்கு கடன் சுமை 50.8 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காட்டிற்கு உயரும் என்றும் அவர் சொன்னார். "நமது பங்குச் சந்தை வீழ்ச்சி அடையும். நமது நாணய மதிப்பு பாதிக் கப்படும். இத்தகைய விளைவு களால் மக்களும் பாதிக்கப்படுவர்," என்று திரு நஜிப் கூறினார்.
எதிர்வரும் தேர்தலில் வாக்கு களைப் பெற வேண்டும் என்பதற்காக விரும்பத்தகாத வாக்குறுதி களை எதிர்க்கட்சிகள் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மலேசியாவில் 14வது பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் தேசிய முன்னணியும் எதிர்க்கட்சிகளும் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான பல்வேறு நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மாணவர்களுக்கு, இளையர் களுக்கு, முதியவர்களுக்கு உதவும் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களையும் சலுகைகளையும் தேசிய முன்னணி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. மக்களுக்கு வழங்கப்படும் மானிய உதவித் தொகையும் 400 ரிங்கிட்டிலிருந்து 800 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்று திரு நஜிப் சென்ற வாரம் அறிவித்திருந்தார். எதிர்வரும் தேர்தலில் தேசிய முன்னணி கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என்று தெரிகிறது.

