வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பை யாராலும் கட்டுப் படுத்த முடியாது என்று முன்னாள் எஃப்பிஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமி கூறியுள்ளார். திரு டிரம்ப்பை சுற்றியுள்ள யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியாது எனவும் டிரம்ப்பின் நடவடிக்கைகளைத் தடுக்கவும் யாரு மில்லை எனவும் அவர் தெரிவித்தார். டிரம்பின் நடத்தையானது நாட்டின் சட்டம் மற்றும் நேர்மை போன்ற தேசிய மதிப்பீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக பிபிசியிடம் பேசிய கோமி கவலை தெரி வித்தார்.
கடந்தாண்டு மே மாதம், திரு கோமியை அதிபர் டிரம்ப் பணி நீக்கம் செய்தார். 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்ப் பிரசாரத்தில் ரஷ்யாவுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுவது தொடர்பில் திரு கோமி விசாரணையைத் தொடங்கவிருந்த நேரத்தில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். திரு டிரம்ப் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்பதற்கு முன்பு அவரை டிரம்ப் டவரில் திரு கோமி சந்தித்துப் பேசிய விவரங்கள் அடங்கிய குறிப்பு கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. டிரம்ப் பதவி ஏற்ற ஒரு வாரத்திற்கு பிறகு வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தின்போது திரு டிரம்ப் தன்னிடம் விசுவாசத்தை எதிர்பார்ப்பதாகக் கூறியதாக திரு கோமி கூறியுள்ளார். ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படுவதை திரு டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே மறுத்து வருகிறார்.

