இரு கொரியாக்களின் தலைவர்களுக்கு இடையில் நேரடி தொலைபேசித் தொடர்பு

இரு கொரியாக்களின் தலைவர்களுக்கு இடையில் நேரடி தொலைபேசித் தொடர்பு

1 mins read

சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் அடுத்த வாரம் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் அவர்களுக்கு இடையில் நேரடி தொலைபேசித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராணுவமயமற்ற பகுதியில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசவுள்ளனர். வடகொரியாவும் தென் கொரியாவும் பக்கத்து நாடுகள் என்ற போதிலும் 1953ஆம் ஆண்டு கொரியப் போர் முடிவுற்றதிலிருந்து அவ்விரு நாடுகளுக்கும் இடையில் அஞ்சல் தொடர்போ அல்லது தொலைபேசித் தொடர்போ இல்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக இரு கொரியாக்களின் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசுவதற்கு வசதியாக நேரடி தொலைபேசித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திரு கிம்மும் திரு மூனும் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளனர். இந்த சந்திப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கொரியப் போருக்குப் பிறகு இரு கொரியாக்களுக்கு இடையில் நடைபெறும் மூன்றாவது முக்கிய சந்திப்பு இது. இரு கொரியாக்களுக்கு இடையில் நீடித்த யுத்தம் முடிந்துவிட்டதை அறிவிக்கும் வகையில் இரு நாடுகளுக்கு இடையில் உடன்பாடு காணப்பட வேண்டும் என்பது தென்கொரியாவின் நோக்கம். வடகொரியத் தலைவரை சந்தித்துப் பேசும்போது அத்தகைய உடன்பாடு காண்பது குறித்து தாங்கள் இருவரும் கலந்துபேசவிருப்பதாக திரு மூன் கூறினார். திரு மூனின் விருப்பம் நிறைவேற அவருக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். வரும் ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக திரு டிரம்ப்பும் வடகொரியத் தலைவரும் சந்தித்துப் பேசவுள்ளனர்.