கோலாலம்பூர்: பொதுத்தேர்தல் என்று வந்து விட்டால் சிலாங்கூர் மன்னர் ஷரபுதின் இட்ரிஸ் ஷா நடுநிலையைப் பின்பற்றுவார் என்று சிலாங்கூர் அரண்மனை வெளி யிட்ட அறிக்கை கூறியது. "சிலாங்கூர் அரண்மனையும் நானும் எப்போதுமே நடுநிலை வகிப்போம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இருக்க மாட்டோம்," என்று சிலாங்கூர் மன்னர் குறிப்பிட்டுள்ளார். மாநில மற்றும் தேசிய அளவில் அரசியல் விவகாரங்களில் மன்னர் தலையிடமாட்டார்", என அவ்வறிக்கை கூறியது.
மன்னர் என்ற முறையில் தமது பொறுப்பு அரசியலுக்கு அப்பாற் பட்டது. நாடாளுமன்ற ஜன நாயகம் மற்றும் அரசியல் அமைப்புச் சட்ட முறையிலான மன்னராட்சி முறைக்கு ஏற்ப, தங்களைப் பிரதிநிதிக்க, பொருத்தமான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடிய மக்கள் சக்தி மீது எப்போதும் தமக்கு நம்பிக்கையும் மரியாதையும் உண்டு என்றும் அவர் கூறினார்.

