வாஷிங்டன்: அமெரிக்காவின் டென் னெஸ்ஸி மாகாணத்தில் ஒரு துப்பாக்கிக் காரன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாய மடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் நேஷ்வில்லி நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.25 மணிக்கு நிகழ்ந்தது என்று அப்பகுதி போலிஸ் தெரிவித்தது.
துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த ஆடவர் உடையின்றி காணப்பட்டதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்திய பின் வெறுங் கால்களுடன் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் ஒரு வெள்ளைக்காரர் என்றும் குறைவான தலைமுடியைக் கொண்டவர் என்றும் போலிஸ் அவரை அடையாளம் கண்டுள்ளது. அந்த உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை நோக்கிச் சுட்டதாக நேஷ்வில்லி போலிஸ் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. தப்பி ஓடிய அந்த ஆடவரை போலிசார் தேடி வருகின்றனர். அந்த ஆடவர் மேலும் ஆயுதங்கள் வைத்திருந்தால் மேலும் ஆபத்துகள் விளைவிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

