கடல் நாகப் படகுப் போட்டியில் 2 படகுகள் மூழ்கி 17 பேர் பலி

1 mins read

பெய்ஜிங்: சீனாவில் நடந்த கடல்நாகப் படகுப் போட்டி ஒன்­றில் இரண்டு படகுகள் கவிழ்ந்து 17 பேர் ஆற்றில் மூழ்கி பலியாயினர். இதனை அந்நாட்டின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது. சீனாவின் குலின் நகரத்தின் அருகே உள்ள ஆற்றில் சென்ற சனிக்கிழமை இந்தப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மிக நீளமான கடல்நாகப் படகுகள் பங்கேற்றன. ஆற்றில் நீரின் வேகம் சக்திவாய்ந்ததாக இருந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் 57 பேர் ஆற்றில் மூழ்கியதாகவும் 200 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறப்படு­கி­றது. மீட்புப் பணி சனிக்கிழமை நள்ளிரவு வரை நடைபெற்­ றது. இரண்டு ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த விபத்து நடந்ததாக சீனத் தொலைக்காட்சியான சிசிடிவி தெரிவித்தது. நீரில் மூழ்கியவர்களில் பலர் பாதுகாப்பு ஜாக்­ கெட் அணிந்திருக்கவில்லை என்றும் அது தெரிவித்தது. இந்த விபத்து தொடர்பாக இரண்டு பேர் தடுத்து வைக்கப் பட்டுள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. கடல்நாகப் படகுத் திருவிழா இந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.