வாஷிங்டன்: ஈரானின் அணுவாயுதத் திட்டம் குறித்து அந்நாட்டுடன் புதிய உடன்பாடு காண முடியும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனும் யோசனை தெரி வித்துள்ளனர். இரு அதிபர்களும் வாஷிங்டனில் பேச்சு நடத்திய பிறகு ஈரானுடனான புதிய உடன்பாடு இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்று திரு டிரம்ப் கூறினார். ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் மற்றும் மத்திய கிழக்கில் ஈரானின் பங்கு ஆகியவற்றையும் புதிய உடன்பாடு உள்ளடக் கியிருக்கும் என்று திரு மெக்ரோன் கூறினார். ஈரானுடன் அனைத்துலக நாடுகள் செய்துகொண்டுள்ள உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகினால் மோசமான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளியல் தடையைத் தளர்த்து வதற்கு பிரதிபலனாக ஈரான் 2015ஆம் ஆண்டு அதன் அணு வாயுதத் திட்டங்களை நிறுத்த இணங்கியது. ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஈரான் மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகளாகக் கருதப்படும் நாடுகளுக்கு இடையே காணப்பட்ட இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியாது என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார். அதற்கான காலக்கெடு மே 12 எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் காலக்கெடுவை திரு டிரம்ப் நீட்டிப்பாரா என்பது தனக்குத் தெரியாது என்று பிரெஞ்சு அதிபர் கூறினார்.
வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரெஞ்சு அதிபர் மெக்ரோன். படம்: ஏஎஃப்பி

