லெபனான் நாடாளுமன்றத் தேர்தல்: வெளிநாடுகளிலும் வாக்குப்பதிவு

லெபனான் நாடாளுமன்றத் தேர்தல்: வெளிநாடுகளிலும் வாக்குப்பதிவு

1 mins read

சிட்னி: பத்து ஆண்டுகளில் முதன்முறையாக நடத்தப்படும் லெபனான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் உள்ள லெபனான் நாட்டைச் சேர்ந்த சுமார் 12,000 பேர் கேன்பெராவில் உள்ள லெபனான் தூதரகத்தில் பதிவுசெய்து இருந்தனர். லெபனானில் அரசியல், பொருளியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தேர்தல் அங்கு அடுத்த மாதம் ஆறாம் தேதி நடைபெற இருக்கிறது.

அமெரிக்க நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான லெபனான் நாட்டவர் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் சுமார் 230,000 லெபனான் மக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. லெபனான் நாடாளுமன்றத்தில் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சரிபாதியாக இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. வெளி நாடுகளில் இருந்து வாக்களிப்பதை அனுமதிக்கும் புதிய சட்டத்தின்படி 39 நாடுகளில் மொத்தம் 116 வாக்குச் சாவடிகளில் சுமார் 82,900 லெபனான் நாட்டவர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.