பங்ளாதே‌ஷில் ரோஹிங்யா முகாம்களை பார்வையிட்ட ஐநா மன்றப் பிரதிநிதிகள்

பங்ளாதே‌ஷில் ரோஹிங்யா முகாம்களை பார்வையிட்ட ஐநா மன்றப் பிரதிநிதிகள்

1 mins read

டாக்கா: பங்ளாதேஷ், மியன்மாருக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உள்ள ஆளில்லாத் தீவுகளில் சிக்கித் தவிக்கும் ரோஹிங்யா அகதிகளை ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த குழு ஒன்று நேற்று பார்வையிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மியன்மாரிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட சுமார் 700,000 ரோஹிங்யா முஸ்லிம்கள் பங்ளாதே‌ஷில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் மியன்மாரில் பாதுகாப்புப் படைகள், உள்ளூர் கும்பல்கள் மேற்கொண்ட மோசமான வன்புணர்வு, கொலைகள் பற்றி அதிகாரிகளிடம் சாட்சியம் அளித்துள்ளனர்.

ரோஹிங்யாக்கள் மியன்மார் நாட்டுக்குத் திரும்ப அனுமதிக்குமாறு மன்றம் மியன்மார் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. 15 நாடுகளைச் சேர்ந்த 26 பேராளர்கள் கோனர்பரா முகாமில் அடைக்கலம் புகுந்துள்ள சுமார் 6,000 அகதிகளைப் பார்வையிட்டதாக பங்ளாதேஷ் அகதிகள் ஆணையர் முகம்மது அப்துல் கலாம் கூறினார். குட்டுபலோங்கில் அமைந்துள்ள அகதிகள் முகாமையும் அதிகாரிகள் பார்வையிடுவர் என்று கூறப் பட்டது. மியன்மாரில் குடியுரிமை வேண்டுவது, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பயணத்தின்போது பங்ளாதேஷ் பிரதமரையும் மன்றப் பிரதிநிதிகள் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டது.