பேங்காக்: தாய்லாந்தின் வடக்கில் அமைந்திருக்கும் சியாங் மாய்யில் உள்ள 'டோய் சுதெப்' எனும் புனித மலையின் அடிவாரத்தில் பல அதிகாரிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று சுமார் 1,000 பேர் போராட்டம் நடத்தினர். வீடுகள் கட்டப்படுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அந்தக் கட்டடங்களை இடித்துத் தரைமட்டமாக்கக் கோரி பலர் பச்சை வண்ண ரிப்பன்கள் அணிந்த வண்ணம் சியாங் மாய்யில் சிங்கப்பூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் போராட்டம் நடத்தினர் என அந்நகர போலிஸ் அதிகாரி ஜிராசக் ஸ்ரீபிரசெர்ட் ஏஎஃப்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்ற அதிகாரிகளுக்காகக் கட்டப்படும் அந்த வீடுகள் அரசாங்க நிலத்திலிருந்து சட்டத்துக்குட்பட்டு கட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் அது பாதுகாக்கப்பட்ட, புனிதமான இடம் எனவும் அங்கு புத்தரின் நினைவுச் சின்னம் இருப்பதாகவும் சியாங் மாய் மக்கள் தெரிவிக்கின்றனர். ஜூன் மாதத்துக்குள் கட்டட வேலைகள் முடியும் என்று கூறப்பட்டிருந்தாலும் தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான விசாரணையை ஒரு குழு மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

