நியூயார்க்: ஈரானுடன் அனைத் துலக நாடுகள் செய்துகொண்ட உடன்பாட்டிலிருந்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விலக வேண்டாம் என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கேட்டுக்கொண்டார். அந்த உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகினால் போர் மூளும் அபாயம் உள்ளதாக அவர் பிபிசியிடம் கூறினார். ஈரானுக்கு அணுவாயுதங்கள் கிடைப்பதை தடுக்கும் நோக் கத்திலேயே அந்த உடன்பாடு காணப்பட்டதாகவும் அவர் கூறினார். அந்த உடன்பாட்டை ஆரம்பத்திலிருந்து குறை கூறி வரும் திரு டிரம்ப், இம்மாதம் 12ஆம் தேதிக்குள் தனது முடிவை அறிவிக்கவிருப்பதாகக் கூறினார். ஈரான் மீது விதிக் கப்பட்ட தடைகளை நீக்குவ தற்கு பிரதிபலனாக அணு ஆயுதத் திட்டத்தை கைவிட 2015ஆம் ஆண்டு ஈரான் ஒப்புக் கொண்டது.
இந் நிலையில், ஈரானுடன் செய்து கொண்ட இந்த உடன்பாடு "ஒரு முக்கிய ராஜதந்திர வெற்றி" என்று குறிப்பிட்ட கட்டெரஸ், இது தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றார். "நல்ல மாற்று உடன்பாடு இல்லாமல் இதனை அகற்றக்கூடாது" என்று கூறிய அவர், அப்படி செய்தால் அபாயகரமான சூழலை சந்திக்க நேரிடும் என்று தெரி வித்தார். ஈரானுடனான அந்த உடன்பாட்டிலிருந்து விலகும் திரு டிரம்ப்பின் முடிவில் மாற்றம் இருக்கப்போவதில்லை என்று வெள்ளை மாளிகை அறிவித்த நிலையில் ஐநா தலைமைச் செயலாளர் இவ்வாறு கூறினார்.

