பெட்டாலிங் ஜெயா: மலேசியத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த உறுப் பினர்களும் முன்னாள் அமைச் சர்களுமான மூவர் அம்னோ கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை அம்னோ கட்சி தலைமைச் செயலாளர் துங்கு அட்னான் உறுதிப்படுத்தினார். முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் சைனுதின், முன்னாள் அமைச்சர் ராய்ஸ் யாத்திம், முன்னாள் அம்னோ மகளிர் அணியின் தலைவி ரஃபிடா அசிஸ் ஆகிய மூவரும் எதிர்க் கட்சிக்கு ஆதரவாக செயல் பட்டதைத் தொடர்ந்து அம்மூவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அட்னான் கூறினார்.
அதுகுறித்து அந்த மூவருக்கும் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் கூறினார். அம்னோ தலைமைச் செய லாளர் என்ற முறையில் கட்சிக்கு எதிராக அவர்கள் செயல்படுவதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். எதிர்க்கட்சிக்கு பிரசாரம் செய்ததற்காக அவர்கள் அம்னோ விலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர்களின் செயல் கட்சி விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் அட்னான் கூறினார்.
மே 9ஆம் தேதி தேர்தலுக்கு முன்னதாகவே போலிசார், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ஊடகத் துறையினர் நேற்று வாக்களிக்கத் தொடங்கினர். ராணுவ அதிகாரி ஒருவர் கோலாலம்பூரில் வாக்களித்த பின்னர் தன் குழந்தையுடன் அங்கிருந்து செல்கிறார். தேர்தலுக்கு முன்னதாகவே நேற்று தொடங்கிய முதல் கட்ட வாக்களிப்பில் 111,702 போலிஸ் அதிகாரிகள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். மலேசிய போலிஸ் படைத் தலைவர் முகம்மது ஃபுஸி ஹருன், உதவித் தலைவர் நூர் ரஷீத் உட்பட பல உயர் அதிகாரிகள் புக்கிட் அமானிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தனர். இதற்கிடையே 5,854 அதிகாரிகள் அஞ்சல் மூலம் வாக்களித்தனர். படம்: ஏஎஃப்பி

