கோலாலம்பூர்: ஆள்கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தில் 16 பேரை மலேசியா கைது செய்துள்ளது. இலங்கை நாட்டவர் என நம்பப்படும் 127 குடியேறிகளுடன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பலை வழிமறித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரி வித்தனர். 'எட்ரா' எனப் பெயரிடப்பட்ட கப்பல் ஒன்றை தெற்கு ஜோகூருக்கப்பால் மலேசிய எல்லைக்குள் கண்டுபிடித்ததாக தேசிய போலிஸ் தலைமை அதிகாரி முகமது ஃபூஸி ஹருன் கூறினார்.
இலங்கையைச் சேர்ந்த சுமார் 100 ஆடவர்கள், 24 பெண்கள், ஒன்பது குழந்தைகள் அந்தக் கப்பலில் இருந்தனர். ஆட்களைக் கடத்தும் அனைத்துலக கும்பலைச் சேர்ந்த 16 பேரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜோகூர் கடற்கரையிலிருந்து கப்பலுக்கு குடியேறிகளை அழைத்துச் செல்லும் மூன்று இந்தோனீசியர்கள், நான்கு மலேசியர்களும் அதில் அடக்கம். மேலும் நான்கு மலேசியர்கள் ஜோகூர் பாருவில் கைது செய்யப்பட்டனர். ஒருவர் பினாங்கில் கைதானார். கப்பலில் இருந்த இலங்கை ஆடவர் நால்வரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும்: epaper.tamilmurasu.com.sg

