மலேசியாவில் நாளை நடைபெறவுள்ள 14வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க 9 நாடுகளின் கண்காணிப்பாளர்கள் மலேசியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். மாலத் தீவு தேர்தல் ஆணையத் தலைவர் அஹமட் ஷரிப் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்த அவர்களை மலேசிய தேர்தல் ஆணைய உறுப்பினர் கே. பாலசிங்கம் வரவேற்றார். தாய்லாந்து, அசர்பைஜான் ஆகிய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் நேற்று மலேசியா வரவிருந்தனர்.
தேர்தலைக் கண்காணிக்க கண்காணிப்பாளர்களை அனுப்ப இந்தியா, கம்போடியா, கிர்கிஸ்தான், மாலத் தீவு, பாகிஸ்தான், தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான் உட்பட ஒன்பது நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையத் தலைவர் முகம்மட் ஹஷிம் அப்துல்லா ஏற்கெனவே கூறியிருந்தார். இவர்களுடன் மலேசியாவில் 14 அரசுசாரா அமைப்புகளைச் சேர்ந்த 1236 பார்வையாளர்களையும் தேர்தலைக் கண்காணிக்க தேர்தல் ஆணையம் நியமித் துள்ளது.

