கோலாலம்பூர்: மலேசியாவில் தேர்தல் சுமூகமாக நடந்தபோதிலும் ஒரு சில இடங்களில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாக புகார் கள் வந்தன. அத்துடன் பொய்யான செய்திகளும் சமூக ஊடகங்களில் பரவவே செய்தன. வாக்களிக்கச் சென்ற மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்ததாக 'வாட்ஸ் அப்' மற்றும் ஃபேஸ்புக் மூலம் பரவிய செய்தி பொய் செய்தி என்று கூறிய மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அத்தகைய செய்தியை பரப்பியவர்களை கடுமையாகச் சாடினார். இத்தகைய பொய்ச் செய்தியை பரப்புவதில் சிலர் ஆர்வமாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
வாக்குச் சீட்டுகள் செல்லு படியாகாமல் இருப்பதற்காக தேர்தல் ஆணையத்தில் முத்திரை இல்லாத வாக்குச் சீட்டுகள் பல வாக் காளர்களுக்கு கொடுக்கப் பட்டதாக செய்திகள் பரவின. இதே செய்தி தாமான் டிசா, கோலாலம்பூர், ஜோகூர் பாரு ஆகிய இடங்களிலும் பரவியதாக திரு நஜிப் கூறினார். தேர்தல் சமயத்தில் பரவும் பொய்ச் செய்திகளை போலிசார் கண்காணித்து வருவதாக போலிஸ் படைத் தலைவர் ஃபுஸி ஹருன் கூறினார். போலிச் செய்திகள் பற்றி தாங்கள் அறிந்திருப்பதாகவும் அவற்றை கண்காணிக்க போலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். எது உண்மை, எது பொய் என்பதை மக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.

